Monday 15 May 2017

தேடல்... ❤


நான் எப்போதுமே கடைசி பெஞ்ச் ஸ்டூடன்தான்.. அதுல ஒரு கெத்து. புத்தகத்தை தவிர வாழ்க்கையில் எல்லாம் எளிதே என்ற ஞானோதையம் பிறந்ததெல்லாம் அங்குதான். பாத்துக்கலாம் என்ற அசால்ட்டுதனம், எதுவா இருந்தாலும் சரி என்ற அளப்பரிய தைரியம் வரமாய் கிட்டியதெல்லாம் கடைசி பெஞ்ஜில் தவம் புரிந்ததாலையே. 

நீ எங்க உருப்பட போர, ஒழுங்கீனம், ஏன்தான் நீயெல்லாம் காலேஜ் வர்றியோ, திருந்தவே மாட்டியா, உன் அம்மா அப்பா ஏன் பணத்த வேஸ்ட் பண்றாங்க., இப்படியான வசனங்கள் எனக்கு மட்டுமே எழுதபட்டதை போல தினமும் அர்ச்சனை செய்வாங்க. இத்தனைக்கும் நான் வகுப்பிற்க்குள் இருந்த நேரம் மிகக்குறைவு. எதிலும் பெயில் ஆனதில்லை அபோவ் 60% தான். என் சேட்டையும், குறும்புதனமும் அவர்களை தொடர்ந்து தொல்லை செய்து கொண்டே இருந்தது. சீனியர், ஜூனியர், பேட்ச்மெட் என எவ்ளோ பேருக்கு என்னை பிடித்திருந்தாலும் என் டிபார்ட்மென்ட்க்கு நான் பிடிக்காத பிள்ளையே. 

எல்லோரும் வசைபாட, எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு மேம், "வைஜேந்தி", பேருக்கேத்த கம்பீரம் முகத்துல. நாங்க பண்ற எல்லா சேட்டையும் ரசிப்பாங்க, நிறைய தடவ எங்கள காப்பாத்தி இருக்காங்க, எனக்காக ஒருதடவ பீஸ்கூட கட்டுனாங்க. அவங்க டெஸ்ட், அசைன்மண்ட் மட்டும் கரைட்டா முடிச்சிருவோம். 

ஒருநாள், ஒரு உச்சி வெயில் நேரம், ப்ரேக்டிஸ் போக கிரவுண்ட்ல நடந்து போறேன்.., மேம் எனக்கு பேர்லரா அந்த பக்கம் குடை பிடிச்சி போயிட்டு இருந்தாங்க. கைகாட்டி கூப்பிட்டாங்க "இந்து" ஒடிச்சென்றேன்.. கூடவே இரண்டு அடி விலகி நடந்து போனேன். சட்டுன்னு என் கை பிடிச்சி தன் குடைக்குள் இழுத்துகிட்டாங்க. "என்னா வெயில்ல? எப்படித்தான் வெயில்லையே கிடக்குறியோ". அன்பில் தொடுதல் மிக அழகானது. என் மீதான நம்பிக்கையை, அக்கரையை, ஏதோ ஒன்றை சொல்லாமல் சொன்னது அந்த தொடுதல். கேட்கிறேன், மேம் எல்லா ப்ரொபசருக்கும் என்ன பிடிக்காது, உங்களுக்கு மட்டும்? "நான் உன் குறும்புதனத்துல என்ன பாக்குறேன் இந்து, வேனா பாரு நீ ரொம்ப நல்ல நிலமைக்கு வருவ. அவ்வளவு சிம்பிளாய், அழுத்தமாய் சொன்னாங்க. என்னை நான் அதிகமாய் நம்ப ஆரம்பித்த தருணம். சிந்தனையோடு உழைப்பும் கைகுலுக்கி அடுத்த லெவலுக்கு என்னை கூட்டிச்சென்றது.. 

சமத்துவமும், மரியாதையும் ஒருசேர ஊட்டிவிட்ட கைகளுக்கு நன்றி சொல்ல தேடி அலைகிறேன். இப்போது அதே கல்லூரியில் இல்லை, முகநூலிலும் இல்லை, திருநெல்வேலி, மதுரை என பல கல்லூரி வெப்சைட்டுக்குள் சென்று பேக்கல்டி லிஸ்ட் பார்த்து பார்த்து சலித்துவிட்டேன். எதிலும் அவங்க முகமோ, பெயரோ எதுவும் இல்லை. என்றாவது ஒருநாள் நாங்கள் சந்தித்து கொள்வோம்! அன்று.. மேம், உங்கள் நம்பிக்கை விதை இன்று விருச்சகமாய் வளர்ந்திருக்கிறது என்பதை காட்டத்தான் இந்த தேடல்... கட்டி அனைத்து சிறு துளியில் கண் நனைக்கத்தான் இந்த தேடல்.. என் வாழ்க்கைக்கான தேடலை விதைத்த உங்களைத்தேடி இந்த தேடல்.. இந்த இரண்டு நாளாய் தூக்கம் இல்லை, ஏதோ ஒரு நெருடல்.. 

மிஸ் யூ மேம் ❤ லவ் யூ மேம் ❤

Tuesday 2 May 2017

பயணம்... ❤


சில தெரியாத மொழிகளையும், பல புரியாத பெயர் கொண்ட பகுதிகளையும் உள்ளடக்கி, கடல் மட்டத்தில் இருந்து 5,642மீ உயர்ந்தும், 477,488 km2 பரப்பளவில் பிரம்மாண்டமாய் விரிந்தது காகசஸ் மலை. ரஷ்ய சம்மேளனத்தில் தொடங்கி, ஜார்ஜியா, அசர்பைய்ஜான், ஆர்மேனியா போன்ற நாடுகளை தொட்டு, கிழக்கே கேஸ்பியன் கடலையும் மேற்கில் கருங்கடலையும் இனைக்கும் மிக நீண்ட மலைத்தொடர். 

30கிமீ மொத்த பயணதூரம். மலைஏறி பார்ப்பதென்று முடிவாயிற்று. டென்ட்டும், கேம்புக்கு தேவையான அத்தியாவசிய பொருளை உள்ளடக்கி என் பேக்பேக் தயாரானது. பயணம் தொடங்கிற்று.. வழியெங்கும் பச்சை கம்பளம் போர்த்திய புல்வெளிகள், பல வண்ண பூக்கள், சுதந்திரமாய் சுற்றி திரியும் பட்டாம் பூச்சிகள், யாரது எங்கள் கோட்டைக்குள் அத்துமீறியதென தேகம் பாய்ந்து போர் புரியும் பெயர் தெரியா பூச்சிகள்.., இல்லை போராளிகள். வெயில், மழை இரண்டும் உடல் நனைத்தது.. ஆங்காங்கே இளைப்பாரி, நெருப்பு மூட்டி உருளைக்கிழங்கு, முட்டை, சாசேஜ் உண்று தெம்பேற்றினோம். மழை நனைக்கையில் கட்டன் சாயா. நாவரண்டு களைப்பில் வேகம் குறைகிறது, ஒருவரை ஒருவர் உற்சாகமூட்டி முன்னேறி செல்கிறோம். சற்று தூரத்தில் அருவியின் இரைச்சல், அந்த பச்சை வாசம் நுரையீரலின் கிளையெங்கும் பச்சை நிறம் பூசி மண்வாசம் நிறப்பியது. தண்ணீருக்கு சுவையும் உண்டு மணமும் உண்டு, அங்கமெங்கும் குளிரூட்டியது. களைத்து போன பாதங்களை அருவியில் இலவசமாய் மசாஜ் செய்து புத்துயிர் ஊட்டினேன். தசையெங்கும் வலி பிழிந்து எடுக்கையில் அந்த காடும், காற்றும் ஏதோ ஒரு எனர்ஜியை எனக்குள் ஊற்றி கொண்டே இருந்தது. இரவு படுக்கை மலை உச்சியில், தாலாட்டு அருவியின் சலசலப்பில், விடியல் பறவையின் கூச்சலில் என்ற காட்சி மனக்கண்ணில் விரிகிறது, காலை எழும் சூரியனை மலை உச்சியில் இருந்து சுண்டி விடலாம் என்ற அகந்தை என் பயணத்தை இலகுவாக்கியது. 

இலக்கை அடைந்தாயிற்று, களைப்பெல்லாம் கலைத்து கர்ஜயித்தேன்.. உலகை வென்றுவிட்டதாய் ஒரு உணர்வு. டென்ட் ரெடிஆகிறது.. ஒரு பக்கம் பனி, மறுபக்கம் அருவி, நடுவில் டென்ட் டிவைன். பெண்ணழகைவிட இயற்கை பேரழகி என்பதாலையே தவம் புரிய காட்டுக்குள் செல்கிறார்கள் போலும். கேம்ப் பயர், இரவு விருந்து ம்ம்ம் அத்தனை சுவை அந்த கபாப். இதற்கெல்லாம் ஒரு தவம் வேண்டும். இரவு குடித்து, நிலா ரசித்து, எண்ண முடியாத நட்சத்திரங்களை எண்ணி எண்ணியே தோற்று போனேன்.. நிசப்தமான இரவில் பூச்சிகளின் ரிங்காரத்தில் இமைகள் ஒன்றை ஒன்று கட்டி அனைத்து கெண்டது. 

காலை புத்துணர்வாய் புலர்ந்தது. மலை அடிவாரத்தில் இருந்து ஒருவர் குதிரையில் வந்திருந்தார்.. காகசஸ் மலையில் குதிரை சவாரி. மனம் துள்ளி குதித்தது. நான் ஓட்டி பாக்கட்டுமா ப்ளீஸ் கேட்டேன். சட்டென பார்வையாலே ஆச்சர்யம் கலந்த கேள்வி வீசினார்கள். "அவ்வளவு எளிதல்ல, ரொம்ப ஆபத்தானது, பேலன்ஸ், கண்ட்ரோல் அதுவும் மலையில கட்டாய பயிற்சி வேணும், ரிஸ்க்" கை, கால் உடைந்தாலும் பிறவாயில்ல என் பதில். ஏறியாயிற்று, மாவீரன் அலெக்சாண்டர் கண்முன்னே வந்துபோனான், அளப்பரிய ஆனந்தம், ஆகச்சிறந்த அனுபவம், கை நடுங்குகிறது, காலால் எட்டி தட்டுகிறேன் குதிரை கிளம்பிற்று.. இதயம் படபடத்து கண் இறுக்கி, சுதாரித்து கண் திறந்தால் சொர்க்கத்தில் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறேன். சாவாரியின் தூரம் சிறிதென்றாலும் உலகை சுற்றிவிட்டதாகவே நம்புகிறேன். அந்த பயணம் முடிந்து விட்டது ஆனாலும் போதையில் மீளாமல் மனம் இன்னும் பயணிக்கிறது.. ❤

Thursday 20 April 2017

விடியாத இரவுகள் ❤


பேங்காக் எல்லாருக்கும் சொர்க்க பூமின்னா எனக்கு அதுக்கும் மேல. பொதுவா நாம எந்த இடத்தையும் மிஸ் பண்றதில்ல அந்த இடம் தந்த அனுபவத்தையும் மெமோரிசையும்தான் மிஸ் பண்றோம். தாமிரபரணி ஊருல பொறந்தாலும், தாய்லாந்தின் சோ பரயா நதியின் மீது ஆக சிறந்த பினைப்பு எனக்கு. 372 Km நீளம் உள்ள நதி, பேங்காக் சிட்டியோட மூலை முடுக்கெல்லாம் தொட்டுச்செல்லும் நதி, பேங்காக் வர்த்தகத்தின் பேக் போன். 

தன் மொத்த நீளத்தில் பல அழகான பாலங்களையும், அகலத்தில் பல அழகான சீனரீசையும் உள்ளடக்கியது. ஊரை மிரட்டும் இடியும் தரை தொடும் மின்னலும் சர்வசாதாரணம் அங்கு. பேய் மழை பாத்து நனைந்ததெல்லாம் அங்கேதான். நண்பர்கூட்டம் மத்தில் அடிக்கடி நான் காணாமல் போய்விடுவேன், ஒரு நாள் நெருக்கமான உறவொன்று அப்படி எங்குதான் போவாய்? சிரித்தபடி கண்மூடி கதை சொன்னேன். 

100 தாய் பாத் குடுத்தா ஒரு சின்ன போட்காரன் என்னை ரிவர்புல்லா சுத்தி காட்டுவான், அதுவும் மழை மின்னல் நேரத்தில் போக கொள்ளை பிரியம். இடி சத்தம் கேட்டால் போதும், சைக்கிளில் கிளம்பிவிடுவேன். வாடிக்கையான கடையில் நண்டு கிரேவி, தாய் பிரைடு ரைஸ் வாங்கிட்டு சைக்கிளை பாதுகாக்க கோரிக்கை வைத்து 2 சாங் டின் பியர் வாங்கி நதிகரை போவேன். எனக்காகவே காத்திருக்கும் போட்மேனுக்கு அந்த 2 சாங், போட் கிளம்புகிறது இல்லை சீறி பாய்கிறது. 

நதி நடுவே நிருத்த சொல்லி எழுந்து நின்று ஆனந்தத்தில் ஆர்பரிப்பேன், கூச்சலிடுவேன், கண்சிமிட்டி கண்சிமிட்டி மின்னல் நதியோடு முத்தமிடும் காட்சியை கண்டு குதூகலிப்பேன், மழைநாளில் முகம் தொட்டு மசாஜ் செய்யும் மழைத்துளியை கையேந்தி நிற்பேன். கரையின் மறுபக்கம் பல வித பாம்புகள் இருக்கும் சற்று அபாயமான இடம்தான் ஆனாலும் அங்குள்ள மின்மினி பூச்சிகள் கொள்ளை அழகு. தொட்டு பிடித்து விளையாடி களைத்தபின் அழைப்பு கொடுக்கும் பெயர் தெரியா நண்பர் வீட்டில் அவர்தரும் சூப் பருகி பயணத்தை தொடர்வேன். 

இந்த முறை சயணநிலையில், தண்ணீரை கிழித்து பல பெரிய கப்பல்களை தாண்டி முந்தி செல்கிறது எங்கள் படகு, வானம் பார்க்கும் அழகுடன், விண்னை தொடும் பல அடுக்கு மாடிகள், ராமா3 பிரிஜ் அத்தனை பிரம்மிப்பு, அப் பயணத்தில் அத்தனை நிம்மதி அத்தனை அழகு அக்குளிர்ந்த காற்று அகம் புறம் வருடிச்செல்லும். சில பொர்ணமி நாட்களில் 3 மணிநேரம்கூட தனிமையில் நதியுடனும் நிலவுடனும் உறவாடி மகிழ்ந்திருக்கிறேன். அந்த சுகம், போதையாகி நதி காதலன் கான செல்கிறேன். 

கதை சொல்லி கண்விழிக்கிறேன், நட்பு கேக்கிறது ஏடா தனியா ராத்திரில அவ்வளவு பெரிய நதில மொழி தெரியாத இடத்துல பயமா இல்லையா? இயற்கைக்கு தெரிந்தது இரண்டே விஷயம். ஒன்று அழகு இன்னொன்று அன்பு. இப்படியாய் சொல்லி முடித்தேன். என்னையும் கூட்டிட்டு போறியா ப்ளீஸ் கேட்கிறது நட்பு! கண்கண்ட அழகு குடித்து செரித்தும் செரிக்காமலும் பலநாள் தூங்காமல் விடிந்திருக்கிறது என் இரவுகள்!! எனக்கென ஒர் இடம் அந்நதிகரையில் இப்போதும் காத்திருக்கிறது, எனக்கான கல்லரை அந்நதிகரையில் எழுப்ப படுமாயின் எனக்கு இறந்தும் சொர்க்கமே சியர்ஸ் 😍❤ ....

Wednesday 29 March 2017

சிநேகிதனே... ❤




யாரும் கர்ணணை பார்த்திறாத போது, என்னுடன், எனக்கடுத்து, என்கூடவே தோள் கொடுத்து நின்றவன் அவன்.. எதற்காகவும் என்னை யாரிடமும் விட்டு கொடுத்திறாதவன், தன்னை காட்டிலும் என்னை அதிகம் நேசித்தவன். இவ்வுலகில் புனிதமும் கண்ணியமும் எதுவென்றால் தயங்காமல் இந்த ஆண், பெண் நட்பை சொல்வேன்! காதல் என்பது கேப்பிட்டலிஷம், நட்பே சோசலிஷம். 

வாழ்க்கை என்னை விரட்டி அடித்த போதும், ஏமாற்றம் என்னில் குடிகொண்ட போதும் ஆதரவாய் கரம் பற்றி ஆறுதலாய் பேசியவன் நீ. என்னை நித்தம் தேற்றி என் தோல்வி ரணங்களில் வெற்றி மருந்திட்டவன் நீ. எப்போதெல்லாம் என் செயலுக்கு இந்த உலகம் திமிர் என்றும் தலைக்கணம் என்றும் பெயரிட்டதோ அப்போதெல்லாம் இது தன்னம்பிக்கை என்றும் தைரியம் என்றும் எனக்குள் நம்பிக்கையை நாளும் விதைத்து கொண்டே இருந்தாய்.. என் புண்ணகைக்கு காவலனாய் இருந்தாய், பலரின் பார்வையில் கேள்வி குறியாகவும், சிலரின் பார்வையில் ஆச்சர்யகுறியாகவும் நிறுத்தப்பட்டோம்..!

நீ இன்றி இந்த வாழ்க்கை இத்தனை எளிதாய், ஸ்வாரஸ்யமாய் இருந்திருக்காது. இத்தனையும் சாத்தியப்பட்டிருக்காது. எனக்கான ஒவ்வொரு முயற்சியிலும் உன் மெனக்கிடுதல் என் ஆர்வத்தை காட்டிலும் அதிகம் என்றால் அது மிகையாகாது. என் வீட்டில் இன்னொரு பிள்ளையாய் நீ, உன் அம்மா சமைத்ததை நீ சாப்பிடதை காட்டிலும் நான் சாப்பிட்ட நாட்களே அதிகம்...

நல்ல நண்பன் ஒரு நூலகத்துக்கு சமம் என்பார்கள், நீ கூகுளுக்கே சமமடா. அவ்வளவு நேசம் உன்னில். எத்தனையோ அழகான சாலைகளை நம் பயணங்கள் பார்த்திருக்கிறது, பல பெயர் தெரியா கடையில் பரோட்டாக்களையும், பல வித பிரியாணியையும் சுவைத்திருக்கிறது நம் வாழ்க்கை. கியர் வண்டி ஓட்டியதெல்லாம் நீ பின்னால் இருந்து உற்சாகபடுத்தியதாலேயே. படம் பார்ப்பதற்கென்றே சென்னை போன நாட்களும் உண்டு. உனக்கு சட்டைகூட, நான் தான் உனக்கு செலக்ட் செய்ய வேண்டும். பர்ப்யூம் வாங்க டியூட்டி ப்ரீ சென்ற நாட்களும், செருப்பு வாங்கியதை செலிபிரேட் பண்ண நாட்களும் இன்னும் லைப் ஸ்டைலில் தொடரத்தான் செய்கிறது. 

உன்னிடம் பிடித்ததும் பிடிக்காததும் நீ என்னை அடிப்பது மட்டுமே.. என்னிடம் உனக்கு பிடித்ததும் பிடிக்காததும் என் வசைகளாகத்தான் இருக்கும். உன்னிடத்தில் கடலளவு கோபம் கொண்டாலும் கடுகளவும் சந்தேகம் கொண்டதில்லை. என் விடியலில் வெயிலாய், இரவுகளில் நட்சத்திரமாய் என் வாழ்வை மெருகேற்றி கொண்டே இருக்கிறாய். என் தோள் மீது கைபோடும் முதல் உரிமைக்கான நண்பன் நீயே. ஒரு அலாதீயான பிரியத்துடன் உன் கை பிடித்து ஒரு பயணம் வேண்டும். இதுவரை உன் உச்சி முகர்ந்ததில்லை, ஆனால் இப்போது ஆசை. உன் நட்பாய், சகோதரியாய் உன் உச்சி முகர்ந்து நெத்தியில் முத்தமிட ஆசை. புரிதல் கொண்ட உன்னுடன் என் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்ள ஆசை. 

என் வாழ்க்கை புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் நீ கமாக்களாய் தொடர்கிறாய்.. முன்னுரை கொடுத்த நீயின்றி முடிவுரை எழுதப்பட போவதில்லை இந்த புத்தகத்திற்க்கு. உன் நட்பில் நனைந்திட இந்த ஒரு ஜென்மம் போதாது சிநேகிதனே... 

நண்பேன்டா... சியர்ஸ் ❤

Thursday 2 March 2017

அவள்... ❤




என் ப்ரெண்ட்டை பத்தி எனக்கு தெரியும் என்ற ஒற்றை வார்த்தையில் தீர்மாணிக்க படுகிறது நட்பின் ஆழம்...

என்னை சட்டென்று குழந்தையாக்க அவளால் மட்டுமே முடியும்...
எங்கோ இருந்து மந்திரத்தால் என்னை புண்ணகைக்க வைக்கும் தந்திரம் அவளுக்கு மட்டுமே தெரியும்..
அவள் இன்னொரு நான்..
என் பிம்பம்..
என் அகம் புறம் தெரிந்து என் தோழோடு நின்றவள்..
இனையில்லா அன்பை இலவசமாய் தந்தவள்..
காரணமே இல்லாமல் என்னை நேசித்தவள்...
வெறும் கையாய் வெற்றிடத்தில் இருந்த என் கைகோர்த்து வர்ணங்களை காட்டியவள்..
என் வலியையும் வேதனையும் என்னைப்போலே உணர்ந்தவள்... தன் அன்பாலே என்னை வலிமையாக்கியவள்..
ஊரும் உறவும் ஒதுக்கிய போதும் எனக்கென இருந்தவள்..
அவள் எனக்கானவள்..
என்னை விட்டு விலகாதவள்..
அவளிடம் மட்டும் என் ஈகோவின் அளவுகோள் பூஜியம்..
என் வெற்றிகள் அனைத்தும் தோல்வியே பகிர்ந்து கொள்ள நீ இல்லா நிலையில்..
என் துன்பங்கள் அனைத்தும் இன்பமே துணையாய் நீ இருக்கையில்...
நட்பென்பது வரம் என்றால் அவள் தவமின்றி வரமாய் வந்தவள் ... எதுவுமே இல்லாத ஒருநாளில் எல்லாமுமாய் இருந்தவள்...

தன்னை விட அதிகமாய் என்னை நேசிக்கும்
அவள் என் பலம்...
Love You Mate.. 💕😊

Sunday 26 February 2017

ரசித்தலும் மெச்சுதலும்...

ரசித்தலும் மெச்சுதலும்....

ரசித்தல் வாழ்வின் யதார்தமான ஸ்வாரஸ்யம்.. மெச்சுதல் ஒரு மோகம். அதற்கென வயது வரம்போ பாலின வேறுபாடோ கிடையாது. ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் தன்னை தானே ரசித்து மெச்சக்கூடியவர்களே. நம்மை உந்திகொண்டே இருக்கும் விசையும் அதுவே.

ஆண்களின் மெச்சுதல் மோகம் பெரும்பாலும் அவர்களின் ஆளுமையை பொருத்ததே. நான் வல்லவன், வீரன், எனக்கு எல்லாம் தெரியும், இதுபோன்ற ஆளுமை சார்ந்த மோகத்திலே மூழ்கி கிடக்கின்றனர். பெரும்பாலும் எதிர்பாலரிடத்தில் அவர்களின் ஈர்ப்பில் அம்மா அக்கா போன்ற குடும்ப சாயம் பூசப்படுவதில்லை. யதார்தமா கலர்புல்லா இருக்குற எல்லாத்தையும் ரசிப்பாங்க ஆனால் மெச்சுதலில் மெச்சூரிட்டியை கோட்டை விட்டுருவாங்க. அங்கதான் அவங்களுக்கு ஆப்பே.

பெண்களின் ரசித்தல் மிக சிம்பிளானது.. தன் ரசனையில் முக்கியமா ஆண் ரசனையில் தன் தந்தையின் சாயலில் இருந்து சகோதர சாயம் வரை தேடுவார்கள். அது உளவியல், டிரெஸ், ஹேர் ஸ்டைல் இப்படி எதுவா வேண்டுமானாலும் இருக்கலாம். சின்ன சின்ன விஷயங்களிலும் அதிகம் ஆனந்தம் தேடி கொள்வார்கள்.. நெயில் பாலிஸ் அழகா இருக்கு என்பதே ஒரு நாள் முழுவதும் இன்பத்தை தரக்கூடியது. எதிர்பாலரை மெச்சுவதிலும் அதன் சூசகத்திலும் இவங்கள மிஞ்சமுடியாது.

சிறு வயதில் ஆண் பிள்ளைகளுக்கு இல்லாத மீசை தாடியின் மீது ஈர்ப்பு வருவது ஆளுமையின் மீதான காதலே. பெண் பிள்ளைகள் தாவனி கட்டி பார்பதும் நகம் வளர்பதும் அழகியல் சார்ந்த ஈர்ப்பே. இந்த ரசனை ஒரு பேன்டசி உலகை உருவாக்கும் மெச்சுதல் ஒரு ஸ்டிராய்டை உடலுக்குள் மூளை முடுக்கெல்லாம் செலுத்தும் அதுக்காகவே நாம் தலைமுதல் கால் வரை மெனக்கிடுறோம்.

ரசித்தலும் மெச்சுதலும் இல்லாத நிலையில் வாழ்க்கை ஸ்வாரஸ்யம் இழந்து ஈடுபாடில்லாது ரொம்ப மெக்கானிக்கலா போகும். அழகு, சிரிப்பு முதல் அழுகை வரை எல்லாத்திலும் நிரம்பி வழிகிறது அள்ளி பருகுங்கள்... திகட்டாதிருக்க மெச்சுங்கள்.

வாழ்வியலின் சுவையே ரசித்துலும் மெச்சுதலும்.. அதனில் சிறந்ததொரு போதை இல்லை... அழகை ஆராதியுங்கள் மெச்சுதலில் மெய் மறந்து முக்தி அடையுங்கள்.. பிறவிப்பலன் எய்துங்கள்.
சியர்ஸ்... ❤❤

Tuesday 21 February 2017

Hugs... 😍

Hugs... ❤😘

ஒருவர் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும் ஒரு மென்மையான ஹக்ஸின் வழியே எளிதாக கடத்திவிட முடியும். இருப்பினும் ஹக்ஸ் கொடுக்கள் வாங்களில் பின்தங்கியவர்களாக இருப்பது நம்ம கலாச்சார பின்னனியே..

ஹக்ஸ்யை பற்றிய உளவியலும் புரிதலும் அனுபவமும் நமக்கில்லை என்றால் மிகையாகாது... நார்த் இந்தியாவுல ஒரளவு நாம இந்த ஹக்ஸ் கலாச்சாரத்த பாக்க முடியும்... நம்ம சைடுல ரொம்ப ட்ரை... வெளிநாட்டின் கலாச்சாரத்தில் ஹக்ஸ் அன்பின் ஒரு யதார்தமான குறியீடு.. ஆனா நம்மிடத்தில் ஹக்ஸ், முத்தம், லவ் யூ இதெல்லாம் காமமாகவே பார்கப்படுகிறது..

கலாச்சாரத்தில் ஊரிப்போன நாம் மரபுசார்ந்த விஷயங்களை புனிதம் பூசி நல்லதென்றும் மற்றதெல்லாம் கண்ணியமில்லாதது எனவும் சாயம் பூசிக்கொள்கிறோம்.. ஹக்ஸ் என்றவுடன் வரும் ஹைப்பர் பீலிங்கையும் மேலோங்கும் திருட்டு எண்ணத்தையும் விட்டொழியுங்கள்..

குடும்பங்களில்கூட குழந்தைகளை கட்டிக்கொள்வதும் மனைவியை கட்டி அனைப்பதையும் தவிர வேறு எந்த விரைட்டிசும் இல்லை... அப்பா அம்மா என தொடங்கி பேமிலி ப்ரெண்ட்ஸ் என அன்பான ஒவ்வொரு உள்ளத்திற்த்கும் அள்ளி கொடுங்கள்.. தொடுதலில் உள்ள அன்பின் ஸ்பரிசத்தை கலாச்சாரத்தை சீரழிக்காது பரிமாரிக்கொள்வோம்.

குடுப்பவர் மனதிலும் வாங்குபவர் மனதிலும் எந்த கபடமும் இல்லா நிலையில் ஹக்ஸ் நல்லதே. இருகரம் விரித்து தெளிந்த சிந்தனையுடன் அன்பு நிறைந்த மனதுடன் வாரி வழங்குங்கள்... அன்பு வளரட்டும்.  

ஹக்ஸ் என்பது உணர்ச்சிகள் இல்லாது உணர்வுகளை அன்பின் வழியாக கடத்தும் குறியீடு என்பதை உணர்ந்த ஒவ்வொரு நெஞ்ஜங்களுக்கும் ஹக்ஸ் & சியர்ஸ்... ❤❤