Monday 15 May 2017

தேடல்... ❤


நான் எப்போதுமே கடைசி பெஞ்ச் ஸ்டூடன்தான்.. அதுல ஒரு கெத்து. புத்தகத்தை தவிர வாழ்க்கையில் எல்லாம் எளிதே என்ற ஞானோதையம் பிறந்ததெல்லாம் அங்குதான். பாத்துக்கலாம் என்ற அசால்ட்டுதனம், எதுவா இருந்தாலும் சரி என்ற அளப்பரிய தைரியம் வரமாய் கிட்டியதெல்லாம் கடைசி பெஞ்ஜில் தவம் புரிந்ததாலையே. 

நீ எங்க உருப்பட போர, ஒழுங்கீனம், ஏன்தான் நீயெல்லாம் காலேஜ் வர்றியோ, திருந்தவே மாட்டியா, உன் அம்மா அப்பா ஏன் பணத்த வேஸ்ட் பண்றாங்க., இப்படியான வசனங்கள் எனக்கு மட்டுமே எழுதபட்டதை போல தினமும் அர்ச்சனை செய்வாங்க. இத்தனைக்கும் நான் வகுப்பிற்க்குள் இருந்த நேரம் மிகக்குறைவு. எதிலும் பெயில் ஆனதில்லை அபோவ் 60% தான். என் சேட்டையும், குறும்புதனமும் அவர்களை தொடர்ந்து தொல்லை செய்து கொண்டே இருந்தது. சீனியர், ஜூனியர், பேட்ச்மெட் என எவ்ளோ பேருக்கு என்னை பிடித்திருந்தாலும் என் டிபார்ட்மென்ட்க்கு நான் பிடிக்காத பிள்ளையே. 

எல்லோரும் வசைபாட, எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு மேம், "வைஜேந்தி", பேருக்கேத்த கம்பீரம் முகத்துல. நாங்க பண்ற எல்லா சேட்டையும் ரசிப்பாங்க, நிறைய தடவ எங்கள காப்பாத்தி இருக்காங்க, எனக்காக ஒருதடவ பீஸ்கூட கட்டுனாங்க. அவங்க டெஸ்ட், அசைன்மண்ட் மட்டும் கரைட்டா முடிச்சிருவோம். 

ஒருநாள், ஒரு உச்சி வெயில் நேரம், ப்ரேக்டிஸ் போக கிரவுண்ட்ல நடந்து போறேன்.., மேம் எனக்கு பேர்லரா அந்த பக்கம் குடை பிடிச்சி போயிட்டு இருந்தாங்க. கைகாட்டி கூப்பிட்டாங்க "இந்து" ஒடிச்சென்றேன்.. கூடவே இரண்டு அடி விலகி நடந்து போனேன். சட்டுன்னு என் கை பிடிச்சி தன் குடைக்குள் இழுத்துகிட்டாங்க. "என்னா வெயில்ல? எப்படித்தான் வெயில்லையே கிடக்குறியோ". அன்பில் தொடுதல் மிக அழகானது. என் மீதான நம்பிக்கையை, அக்கரையை, ஏதோ ஒன்றை சொல்லாமல் சொன்னது அந்த தொடுதல். கேட்கிறேன், மேம் எல்லா ப்ரொபசருக்கும் என்ன பிடிக்காது, உங்களுக்கு மட்டும்? "நான் உன் குறும்புதனத்துல என்ன பாக்குறேன் இந்து, வேனா பாரு நீ ரொம்ப நல்ல நிலமைக்கு வருவ. அவ்வளவு சிம்பிளாய், அழுத்தமாய் சொன்னாங்க. என்னை நான் அதிகமாய் நம்ப ஆரம்பித்த தருணம். சிந்தனையோடு உழைப்பும் கைகுலுக்கி அடுத்த லெவலுக்கு என்னை கூட்டிச்சென்றது.. 

சமத்துவமும், மரியாதையும் ஒருசேர ஊட்டிவிட்ட கைகளுக்கு நன்றி சொல்ல தேடி அலைகிறேன். இப்போது அதே கல்லூரியில் இல்லை, முகநூலிலும் இல்லை, திருநெல்வேலி, மதுரை என பல கல்லூரி வெப்சைட்டுக்குள் சென்று பேக்கல்டி லிஸ்ட் பார்த்து பார்த்து சலித்துவிட்டேன். எதிலும் அவங்க முகமோ, பெயரோ எதுவும் இல்லை. என்றாவது ஒருநாள் நாங்கள் சந்தித்து கொள்வோம்! அன்று.. மேம், உங்கள் நம்பிக்கை விதை இன்று விருச்சகமாய் வளர்ந்திருக்கிறது என்பதை காட்டத்தான் இந்த தேடல்... கட்டி அனைத்து சிறு துளியில் கண் நனைக்கத்தான் இந்த தேடல்.. என் வாழ்க்கைக்கான தேடலை விதைத்த உங்களைத்தேடி இந்த தேடல்.. இந்த இரண்டு நாளாய் தூக்கம் இல்லை, ஏதோ ஒரு நெருடல்.. 

மிஸ் யூ மேம் ❤ லவ் யூ மேம் ❤

Tuesday 2 May 2017

பயணம்... ❤


சில தெரியாத மொழிகளையும், பல புரியாத பெயர் கொண்ட பகுதிகளையும் உள்ளடக்கி, கடல் மட்டத்தில் இருந்து 5,642மீ உயர்ந்தும், 477,488 km2 பரப்பளவில் பிரம்மாண்டமாய் விரிந்தது காகசஸ் மலை. ரஷ்ய சம்மேளனத்தில் தொடங்கி, ஜார்ஜியா, அசர்பைய்ஜான், ஆர்மேனியா போன்ற நாடுகளை தொட்டு, கிழக்கே கேஸ்பியன் கடலையும் மேற்கில் கருங்கடலையும் இனைக்கும் மிக நீண்ட மலைத்தொடர். 

30கிமீ மொத்த பயணதூரம். மலைஏறி பார்ப்பதென்று முடிவாயிற்று. டென்ட்டும், கேம்புக்கு தேவையான அத்தியாவசிய பொருளை உள்ளடக்கி என் பேக்பேக் தயாரானது. பயணம் தொடங்கிற்று.. வழியெங்கும் பச்சை கம்பளம் போர்த்திய புல்வெளிகள், பல வண்ண பூக்கள், சுதந்திரமாய் சுற்றி திரியும் பட்டாம் பூச்சிகள், யாரது எங்கள் கோட்டைக்குள் அத்துமீறியதென தேகம் பாய்ந்து போர் புரியும் பெயர் தெரியா பூச்சிகள்.., இல்லை போராளிகள். வெயில், மழை இரண்டும் உடல் நனைத்தது.. ஆங்காங்கே இளைப்பாரி, நெருப்பு மூட்டி உருளைக்கிழங்கு, முட்டை, சாசேஜ் உண்று தெம்பேற்றினோம். மழை நனைக்கையில் கட்டன் சாயா. நாவரண்டு களைப்பில் வேகம் குறைகிறது, ஒருவரை ஒருவர் உற்சாகமூட்டி முன்னேறி செல்கிறோம். சற்று தூரத்தில் அருவியின் இரைச்சல், அந்த பச்சை வாசம் நுரையீரலின் கிளையெங்கும் பச்சை நிறம் பூசி மண்வாசம் நிறப்பியது. தண்ணீருக்கு சுவையும் உண்டு மணமும் உண்டு, அங்கமெங்கும் குளிரூட்டியது. களைத்து போன பாதங்களை அருவியில் இலவசமாய் மசாஜ் செய்து புத்துயிர் ஊட்டினேன். தசையெங்கும் வலி பிழிந்து எடுக்கையில் அந்த காடும், காற்றும் ஏதோ ஒரு எனர்ஜியை எனக்குள் ஊற்றி கொண்டே இருந்தது. இரவு படுக்கை மலை உச்சியில், தாலாட்டு அருவியின் சலசலப்பில், விடியல் பறவையின் கூச்சலில் என்ற காட்சி மனக்கண்ணில் விரிகிறது, காலை எழும் சூரியனை மலை உச்சியில் இருந்து சுண்டி விடலாம் என்ற அகந்தை என் பயணத்தை இலகுவாக்கியது. 

இலக்கை அடைந்தாயிற்று, களைப்பெல்லாம் கலைத்து கர்ஜயித்தேன்.. உலகை வென்றுவிட்டதாய் ஒரு உணர்வு. டென்ட் ரெடிஆகிறது.. ஒரு பக்கம் பனி, மறுபக்கம் அருவி, நடுவில் டென்ட் டிவைன். பெண்ணழகைவிட இயற்கை பேரழகி என்பதாலையே தவம் புரிய காட்டுக்குள் செல்கிறார்கள் போலும். கேம்ப் பயர், இரவு விருந்து ம்ம்ம் அத்தனை சுவை அந்த கபாப். இதற்கெல்லாம் ஒரு தவம் வேண்டும். இரவு குடித்து, நிலா ரசித்து, எண்ண முடியாத நட்சத்திரங்களை எண்ணி எண்ணியே தோற்று போனேன்.. நிசப்தமான இரவில் பூச்சிகளின் ரிங்காரத்தில் இமைகள் ஒன்றை ஒன்று கட்டி அனைத்து கெண்டது. 

காலை புத்துணர்வாய் புலர்ந்தது. மலை அடிவாரத்தில் இருந்து ஒருவர் குதிரையில் வந்திருந்தார்.. காகசஸ் மலையில் குதிரை சவாரி. மனம் துள்ளி குதித்தது. நான் ஓட்டி பாக்கட்டுமா ப்ளீஸ் கேட்டேன். சட்டென பார்வையாலே ஆச்சர்யம் கலந்த கேள்வி வீசினார்கள். "அவ்வளவு எளிதல்ல, ரொம்ப ஆபத்தானது, பேலன்ஸ், கண்ட்ரோல் அதுவும் மலையில கட்டாய பயிற்சி வேணும், ரிஸ்க்" கை, கால் உடைந்தாலும் பிறவாயில்ல என் பதில். ஏறியாயிற்று, மாவீரன் அலெக்சாண்டர் கண்முன்னே வந்துபோனான், அளப்பரிய ஆனந்தம், ஆகச்சிறந்த அனுபவம், கை நடுங்குகிறது, காலால் எட்டி தட்டுகிறேன் குதிரை கிளம்பிற்று.. இதயம் படபடத்து கண் இறுக்கி, சுதாரித்து கண் திறந்தால் சொர்க்கத்தில் பாய்ந்து சென்று கொண்டிருக்கிறேன். சாவாரியின் தூரம் சிறிதென்றாலும் உலகை சுற்றிவிட்டதாகவே நம்புகிறேன். அந்த பயணம் முடிந்து விட்டது ஆனாலும் போதையில் மீளாமல் மனம் இன்னும் பயணிக்கிறது.. ❤