Monday 15 May 2017

தேடல்... ❤


நான் எப்போதுமே கடைசி பெஞ்ச் ஸ்டூடன்தான்.. அதுல ஒரு கெத்து. புத்தகத்தை தவிர வாழ்க்கையில் எல்லாம் எளிதே என்ற ஞானோதையம் பிறந்ததெல்லாம் அங்குதான். பாத்துக்கலாம் என்ற அசால்ட்டுதனம், எதுவா இருந்தாலும் சரி என்ற அளப்பரிய தைரியம் வரமாய் கிட்டியதெல்லாம் கடைசி பெஞ்ஜில் தவம் புரிந்ததாலையே. 

நீ எங்க உருப்பட போர, ஒழுங்கீனம், ஏன்தான் நீயெல்லாம் காலேஜ் வர்றியோ, திருந்தவே மாட்டியா, உன் அம்மா அப்பா ஏன் பணத்த வேஸ்ட் பண்றாங்க., இப்படியான வசனங்கள் எனக்கு மட்டுமே எழுதபட்டதை போல தினமும் அர்ச்சனை செய்வாங்க. இத்தனைக்கும் நான் வகுப்பிற்க்குள் இருந்த நேரம் மிகக்குறைவு. எதிலும் பெயில் ஆனதில்லை அபோவ் 60% தான். என் சேட்டையும், குறும்புதனமும் அவர்களை தொடர்ந்து தொல்லை செய்து கொண்டே இருந்தது. சீனியர், ஜூனியர், பேட்ச்மெட் என எவ்ளோ பேருக்கு என்னை பிடித்திருந்தாலும் என் டிபார்ட்மென்ட்க்கு நான் பிடிக்காத பிள்ளையே. 

எல்லோரும் வசைபாட, எங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச ஒரு மேம், "வைஜேந்தி", பேருக்கேத்த கம்பீரம் முகத்துல. நாங்க பண்ற எல்லா சேட்டையும் ரசிப்பாங்க, நிறைய தடவ எங்கள காப்பாத்தி இருக்காங்க, எனக்காக ஒருதடவ பீஸ்கூட கட்டுனாங்க. அவங்க டெஸ்ட், அசைன்மண்ட் மட்டும் கரைட்டா முடிச்சிருவோம். 

ஒருநாள், ஒரு உச்சி வெயில் நேரம், ப்ரேக்டிஸ் போக கிரவுண்ட்ல நடந்து போறேன்.., மேம் எனக்கு பேர்லரா அந்த பக்கம் குடை பிடிச்சி போயிட்டு இருந்தாங்க. கைகாட்டி கூப்பிட்டாங்க "இந்து" ஒடிச்சென்றேன்.. கூடவே இரண்டு அடி விலகி நடந்து போனேன். சட்டுன்னு என் கை பிடிச்சி தன் குடைக்குள் இழுத்துகிட்டாங்க. "என்னா வெயில்ல? எப்படித்தான் வெயில்லையே கிடக்குறியோ". அன்பில் தொடுதல் மிக அழகானது. என் மீதான நம்பிக்கையை, அக்கரையை, ஏதோ ஒன்றை சொல்லாமல் சொன்னது அந்த தொடுதல். கேட்கிறேன், மேம் எல்லா ப்ரொபசருக்கும் என்ன பிடிக்காது, உங்களுக்கு மட்டும்? "நான் உன் குறும்புதனத்துல என்ன பாக்குறேன் இந்து, வேனா பாரு நீ ரொம்ப நல்ல நிலமைக்கு வருவ. அவ்வளவு சிம்பிளாய், அழுத்தமாய் சொன்னாங்க. என்னை நான் அதிகமாய் நம்ப ஆரம்பித்த தருணம். சிந்தனையோடு உழைப்பும் கைகுலுக்கி அடுத்த லெவலுக்கு என்னை கூட்டிச்சென்றது.. 

சமத்துவமும், மரியாதையும் ஒருசேர ஊட்டிவிட்ட கைகளுக்கு நன்றி சொல்ல தேடி அலைகிறேன். இப்போது அதே கல்லூரியில் இல்லை, முகநூலிலும் இல்லை, திருநெல்வேலி, மதுரை என பல கல்லூரி வெப்சைட்டுக்குள் சென்று பேக்கல்டி லிஸ்ட் பார்த்து பார்த்து சலித்துவிட்டேன். எதிலும் அவங்க முகமோ, பெயரோ எதுவும் இல்லை. என்றாவது ஒருநாள் நாங்கள் சந்தித்து கொள்வோம்! அன்று.. மேம், உங்கள் நம்பிக்கை விதை இன்று விருச்சகமாய் வளர்ந்திருக்கிறது என்பதை காட்டத்தான் இந்த தேடல்... கட்டி அனைத்து சிறு துளியில் கண் நனைக்கத்தான் இந்த தேடல்.. என் வாழ்க்கைக்கான தேடலை விதைத்த உங்களைத்தேடி இந்த தேடல்.. இந்த இரண்டு நாளாய் தூக்கம் இல்லை, ஏதோ ஒரு நெருடல்.. 

மிஸ் யூ மேம் ❤ லவ் யூ மேம் ❤

1 comment: